தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.98.15 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
தர்மபுரி: ''தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, உழவர் சந்தைகளில், 11.72 கோடி டன் அளவிலான காய்கறி மற்றும் பழங்கள், 98.15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன,'' என, தர்மபுரி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பயனடையும் வகையில், தரமான காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யபடுகிறது. இதில், பாலக்கோடு, காரிமங்கலம், ஏ.ஜெட்டிஹள்ளி, பென்னாகரம், தர்மபுரி, அரூர் என, 6 உழவர் சந்தைகள் உள்ளன. இதில், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தர்மபுரி டவுனில் உள்ள மாலை நேர உழவர் சந்தைக்கும் நுகர்வோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த, 2024 ம் ஆண்டில் பாலக்கோடு உழவர் சந்தையில், 33.32, காரிமங்கலம், 1.65, ஏ.ஜெட்டிஹள்ளி, 43.28, பென்னாகரம், 26.26, அரூர், 30.95, லட்சம் டன், தர்மபுரி, 10.36 கோடி டன் காய்கறி மற்றும் பழங்கள் என, 11.72 கோடி டன் அளவிலான காய்கறிகள், 98.15 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இதில், 90,504 விவசாயிகள், 54.82 லட்சம் நுகர்வோர் பயனடைந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.