ஓவியத்திற்கு மெஹந்தியால் உயிருட்டும் மகாலட்சுமி
ஓவியத்தை மெஹந்தி, கோலங்கள் மூலமாக வரைந்து தனக்கென தனி முத்திரை பதித்திருகிறார் காரைக்குடி மகாலட்சுமி.
மகாலட்சுமிக்கு சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம். பள்ளி, கல்லுாரி காலங்களில் பல்வேறு பரிசுகளை பெற்றிருக்கிறார். பேஷன் டெக்னாலஜி படித்தபின்பு, சென்னையில் தன் துறை சார்ந்த பணியில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தாலும் ஓவியம் மீதான காதல் அவரை மீண்டும் சொந்த ஊருக்கு கொண்டு வந்தது. முதலில் பொட்டிக் வைத்து ஸ்டிச்சிங் பணி செய்தாலும், வரையும் கலை மீதான ஆர்வம் அவரை விடவில்லை.
மார்கழி கோலப்போட்டிகளில் பங்கேற்று அனைத்திலுமே முதல் பரிசு பெற்றார். இவர் வரையும் கோலங்கள் எல்லாமே ஓவியங்கள் போலவே காட்சியளிக்கும். மருதாணியிடுவது தற்போது மெஹந்தியாக மாறியிருக்கிறது. அதனை ஏன் ஓவியமாக வரையக் கூடாது என எண்ணி சிறிதாக தொடங்கிய பணி இன்று விருட்சமாக வளர்ந்து தமிழகமெங்கும் இவரின் மெஹந்தி ஓவியத்திற்கு வாடிக்கையாளர்கள் போட்டி போடுகின்றனர். முதலில் தான் வரையும் மெஹந்தி ஓவியங்களையும், கோலங்களையும் சமூக வலைதளங்களில் எதார்த்தமாக பதிவிட அது நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் உந்து சக்தியாக மாறி இதுவே இவரின் தொழிலாகவும் தற்போது மாறி விட்டது.
முதலில் மற்றவர்கள் மருதாணி போடுவது போல் கைகளில் வரைந்தாலும் நாளடைவில் புதுமையாக செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. மனித உருவத்தை கைகளில் மெஹந்தியாக வரைந்தார். முருகன், சிவன் - பார்வதி என பல்வேறு கடவுள்களின் உருவங்களையே மனிதர்களின் கைகளில் நேர்த்தியாக வரைவது இவரின் தனிச்சிறப்பு.
தற்போது தன் ஊரின் பெயரையே அடையாளமாக் கொண்டு காரைக்குடி மெஹந்தி ஆர்டிஸ்ட் என்ற பெயரில் சமூக வலைதளங்களையும் கவர்ந்திருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு பூ கட்டினால் ரூ.150 கிடைக்கும். அதை வைத்து சிரமப்படும் தாயின் பாரத்தை குறைக்கலாம் என எண்ணி பள்ளி, கல்லுாரி காலங்களில் பூ கட்டி படித்த மகாலட்சுமியின் இன்றைய ஒரு மணி நேரம் பல ஆயிரங்களை சம்பாதித்து கொண்டிருக்கிறது. தற்போது இவரிடம் 150க்கும் மேற்பட்டோர் நேரடி, ஆன்லைன் வாயிலாக பயில்கின்றனர். குடும்பத்தின் ஊக்கமான வார்த்தைகளும், நம்பிக்கையும் கிடைத்தால் போதும் பெண்கள் எப்போதும் தன் திறமையை கொண்டு சாதிக்கலாம் எனக் கூறுகிறார் மகாலட்சுமி.
அவர் கூறியதாவது: என் திறமை மீது எனக்கு இருந்த நம்பிக்கையை காட்டிலும் என் குடும்பத்தாரும், நண்பர்களும் வைத்தது அதிகம். அதுவே நான் இந்தளவிற்கு வருதற்கான காரணம். அனைத்து பெண்களுக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். பெற்றோர்கள் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதும் பெண்கள் அத்திறமை கொண்டு எல்லையில்லா சாதனை படைப்பர். இன்னும் பல உயரங்களை அடைய வேண்டுமென்பதே நோக்கம் என்றார்.
instagram: karaikudi_mehandi_artist_maha