கேரள திரைப்படத்துறைக்கு ரூ.650 கோடி நஷ்டம்!
திருவனந்தபுரம்: நடப்பு 2024ம் ஆண்டில் மலையாள திரைப்படத்துறைக்கு ரூ.650 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இது குறித்து கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராகேஷ் கூறியதாவது: நடப்பு 2024ம் ஆண்டில் மொத்தம் 204 திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் 26 படங்கள் மட்டுமே ரூ.300 கோடியிலிருந்து 350 கோடி வரை தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தன.
மற்ற படங்களால் கேரள திரைப்படத்துறைக்கு ரூ.650 கோடி முதல் ரூ.700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.
இதனால், மலையாள திரையுலகில் நடிகர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் சினிமா துறையை நிலைநிறுத்த கடுமையான பணம் தொடர்பான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
நடிகர்களின் சம்பளம் அதிகரித்து வருவதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை தயாரிப்பாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தொழில்துறையை சிறப்பாக நடத்துவதற்கு தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைக்க நடிகர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.