கஞ்சா வழக்கில் எம்.எல்.ஏ., மகன் கைது
ஆலப்புழா: கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், காயம்குளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பிரதிபா. குட்டநாடு என்ற இடத்தில் இவரது மகன் உட்பட ஒன்பது பேர் கஞ்சா புகைத்துக் கொண்டும், கஞ்சா பொட்டலங்களை கையிலும் வைத்திருந்துள்ளனர்.
அவ்வழியாகச் சென்ற மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், அனைவரையும் அழைத்து சோதனையிட்டனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலம் சிக்கவே, அனைவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், அவர்களை கைது செய்தனர். இந்த செய்தி கேரள ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், தன் மகன் கைது செய்யப்படவில்லை என எம்.எல்.ஏ., பிரதிபா, பேஸ்புக் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறுகையில், 'என் மகனும், அவனது நண்பர்களும் ஒன்றாக அமர்ந்திருந்த போது, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வந்து விசாரித்துள்ளனர்.
'அதற்குள் என் மகன் கஞ்சா வைத்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஊடகங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.
இந்நிலையில், மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் எம்.எல்.ஏ., மகன் உட்பட ஒன்பது பேரை கஞ்சா வைத்திருந்ததற்காக கைது செய்ததாகவும், அது மிகக் குறைந்த அளவு என்பதால் ஜாமினில் விடுவித்ததாகவும் கூறியுள்ளனர்.