3 குழந்தைகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை
தட்சிண கன்னடா, கர்நாடகாவில், தன் மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றதுடன், மனைவியையும் கொல்ல முயற்சித்தவருக்கு, நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஹிதேஷ் ஷெட்டிகர், 42 - லட்சுமி, 35, தம்பதி. இவர்களுக்கு ரஷ்மிதா, 13, உதய், 11, தக் ஷித், 4, என மூன்று குழந்தைகள் இருந்தனர்.
சமையல்காரராக பணியாற்றி வந்த ஹிதேஷ், அப்பணியை விட்டு, வீட்டிலேயே பொழுதை கழித்தார். இதனால் அவரது மனைவி, பல வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார்.
வீட்டிற்கு தேவையானதை வாங்க முடியாமல் அவரது மனைவி சிரமப்பட்டார். 2022 ஜூன் 22ல், மனைவி வெளியே சென்றிருந்த போது, குழந்தைகள் கிணற்றின் அருகில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது ஹிதேஷ், மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசி விட்டு, வீட்டுக்குள் வந்துவிட்டார். வெளியே சென்ற மனைவி, வீட்டுக்கு வந்து குழந்தைகள் குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு ஹிதேஷ், கிணற்றை நோக்கி கையை நீட்டினார். பதறிய மனைவி, கிணற்றின் அருகே சென்று பார்த்த போது, ஒரு குழந்தை மட்டும் தத்தளித்துக் கொண்டிருந்தது.
உதவிக்கு கூச்சலிட்ட அவர், குழந்தையை காப்பாற்ற கயிற்றை போட முயற்சித்தார். பின்னால் இருந்து வந்த ஹிதேஷ், மனைவியையும், கிணற்றிற்குள் தள்ளிவிடும் போது, தானும் தவறி விழுந்தார். கூச்சல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தண்ணீரில் தத்தளித்த கணவன், மனைவி, மூன்று குழந்தைகளையும் மீட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், மூன்று குழந்தைகளும் இறந்தன.
போலீசார் விசாரித்த போது, நடந்த சம்பவங்களை லட்சுமி விவரித்தார். அவர் அளித்த புகாரின்படி, ஹிதேசை கைது செய்தனர்.
இவ்வழக்கு, மூன்றாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், ஹிதேசுக்கு மரண தண்டனையும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.