பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலி சபரிமலையில் சிறப்பு பாஸ் நிறுத்தம்
சபரிமலை சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், வனப்பகுதி வழியாக பக்தர்கள் செல்வதற்காக வழங்கப்பட்ட சிறப்பு பாஸ் வசதி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வழிபட சபரிமலைக்கு வருகின்றனர்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெருவழிப்பாதை, சிறுவழிப்பாதை என, இரண்டு பாதைகளில் செல்வர்.
இதில், சிறுவழிப்பாதை என்பது பம்பை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து 4 கி.மீ., நீலிமலை வழியாக சன்னிதானம் சென்றடைவர். பெரும்பாலான பக்தர்கள், எளிய வழியான இந்த பாதையைத்தான் பயன்படுத்துவர்.
பெருவழிப்பாதை என்பது எருமேலியில் இருந்து வனப்பாதை வழியாக 50 கி.மீ., துாரம் நடந்து கரிமலை, பெரியானைவட்டம் வழியாக பம்பை சென்று அங்கிருந்து சபரிமலை செல்வர்.
அவ்வாறு செல்லும் பக்தர்கள், பம்பையில் இருந்து அனைத்து பக்தர்களுடன் சேர்ந்து மலையேறி தரிசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு வரும் பக்தர்களின் நிலையை கருதி, தினமும் 5,000 பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கும் நடைமுறையை தேவசம்போர்டு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இதன் வாயிலாக வனப் பகுதி வழியாக வரும் பக்தர்கள், மற்ற பக்தர்களுடன் தரிசனத்துக்காக காத்திருக்காமல், சிறப்பு வழியில் சென்று தரிசிக்க முடியும்.
இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சிறப்பு பாஸ் வழங்கும் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேவசம்போர்டு குழு உறுப்பினர் அஜித்குமார் கூறுகையில், ''சன்னிதானத்தில், அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தடுக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.