அமெரிக்காவில் நடந்த தாக்குதல் ஐ.எஸ்., அமைப்புக்கு தொடர்பு

நியூ ஓர்லென்ஸ்: அமெரிக்காவின் லுாசியானா மாகாணம் நியூ ஓர்லென்ஸ் நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது, வாகனம் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியவர், முன்னாள் ராணுவ வீரர் என்றும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர் என்பதும் தெரிவந்துள்ளது.

அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தின் நியூ ஓர்லென்ஸ் நகரில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்தன. அங்குள்ள முக்கிய சுற்றுலா தலமான போர்பன் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த ஒரு வாகனம், தடுப்புகளை உடைத்துக் கொண்டு, கூட்டத்துக்குள் திடீரென புகுந்தது. இதனால், மக்கள் அலறியடித்து ஓடினர். அங்கிருந்த போலீசார், தங்கள் வாகனங்களை குறுக்கே செலுத்தி, அந்த வாகனத்தை நிறுத்தினர்.

அதில் இருந்து இறங்கியவர், துப்பாக்கியால் சரமாரியாக சுடத் துவங்கினார். போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் அந்த நபர் கொல்லப்பட்டார்.

அந்த நபர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்துள்ளதாக போலீஸ் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாக்குதல் நடத்தியவரின் பெயர் சம்சுதீன் ஜப்பார், 42, என்பதும், டெக்சாஸைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு முன், ஜப்பார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் மற்றும் வீடியோக்களை போலீசார் மீட்டுள்ளனர். அதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் அவர் ஈர்க்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகில், வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அவர் வந்த வாகனத்தில், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் இருந்தன. அதனால், இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும், வேறு சிலருக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்றும் அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ., சந்தேகப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement