'யோகா உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கக்கூடியது' கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை சார்பில் 30-வது சர்வதேச யோகா திருவிழா பழைய துறைமுக வளாகத்தில் நேற்று துவங்கியது.

விழாவை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமைச் செயலர் சரத் சவுகான், சுற்றுலாத்துறை செயலர் ஜெயந்த குமார் ரே, இயக்குனர் முரளிதரன், யோகா பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

யோகா திருவிழா வரும் 7 ம் தேதி வரை நடக்கிறது.

நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது; 30வது சர்வதேச யோகா திருவிழா, பாரதத்தின் தகுதியை உலகத்திற்கு எடுத்துக் காட்டுகின்ற இன்னொரு அற்புதமான விழா. மனித சமுதாயத்தை வழி நடத்தக் கூடியதாக இருக்கிறது. கர்மா, பக்தி, ஞானம், கிரிய உள்ளிட்ட யோகா பழைய காலத்து பாரதத்தில் இருந்துதான் தோன்றியது. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா பயிற்சி செய்யப்படுகிறது.

யோகா கலையை இன்று உலகமே பார்க்கிறது. இதற்கு நாம் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். கடந்த 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் அவர் வைத்த கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

மனிதனின் உடலையும் மனதையும் ஒரே நேரத்தில் ஆரோக்கியமாக வைக்கக்கூடிய ஒரு பயிற்சி முறை.

பல்வேறு நோய்களில் இருந்து மனித குலத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கான தீர்வு யோகா தரும். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், அலுவலர்கள், நோயாளிகள் என்று எல்லோருக்கும் பயன் தரும் விதத்தில் யோகாவை எளிமைப்படுத்தி, முறைப்படுத்தி பயிற்சி தர வேண்டும்.

அப்போது தான் இந்த யோகா கலையை எல்லோராலும் உணரப்படும்' என்றார்.

Advertisement