ஆறு அடி மரக்கன்றுகள் மட்டுமே நடவு செய்ய உத்தரவு

1

சென்னை:'அரசின் திட்டங்கள் வாயிலாக, 6 அடி உயரம் வளர்ந்த மரக்கன்றுகளை மட்டுமே, இனிவரும் காலங்களில் நடவு செய்ய வேண்டும்' என, அரசு துறைகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், 1 கோடி மரக்கன்றுகள் வரை நடப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை காய்ந்து விடுகின்றன. இதற்கு முறையான பராமரிப்பு இல்லாதது உட்பட, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இதன் காரணமாக, கடந்த ஆண்டு மரக்கன்றுகள் நடப்பட்ட இடத்திலேயே, இந்த ஆண்டு மரக்கன்று நடும் வேடிக்கை சம்பவங்களும் நடக்கின்றன. இது, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் முயற்சியை கேலி கூத்தாக்குகிறது. அரசின் நிதியும் பெருமளவு வீணடிக்கப்படுகிறது.

சிறிய மரக்கன்றுகளை நடுவதால், அவை வளர்ந்து வருவதற்குள், கால்நடைகளால் சேதப்படுத்தப்படுகின்றன. இது மரக்கன்றுகள் வளராததற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, 6 அடி உயரம் வரை வளர்ந்த மரக்கன்றுகளை மட்டுமே, இனி வரும் காலங்களில் நடவு செய்ய வேண்டும் என, அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை தாங்கும் மரவகைகளை, அதிகம் நடவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement