சிறுமியை சீண்டியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

செங்கல்பட்டு, சென்னை, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, 5ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி தந்தையின் நண்பரான கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த ராயப்பன், 38, என்பவர், சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

கடந்த 2019 ஜூலை 6ம் தேதி மாலை, பள்ளியிலிருந்து சிறுமியை அழைத்து வந்த ராயப்பன், அய்யப்பா நகர் ஏரிக்கரை அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதை வெளியில் கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் கூற, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு செய்த போலீசார், ராயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது.

வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ராயப்பனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 1.50 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதன் பின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ராயப்பனுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

Advertisement