கடனை கேட்டதால் மெஷின் ஆப்பரேட்டர் கொலை
கோபி, ஜன. 3-
கடனை திரும்ப கேட்ட மெஷின் ஆப்பரேட்டரை, வாய்க்காலில் தள்ளி கொன்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திங்களூர் அருகே பாண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ், 39; குன்னத்துார் ஸ்பின்னிங் மில் மெஷின் ஆப்பரேட்டர். கடந்த மாதம், 24ல் வெளியே சென்ற யுவராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் தாய் ராமாயாள், 68, கொடுத்த புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரித்து வந்தனர். கடந்த, 27ல் பாண்டியம்பாளையத்தில் கீழ்பவானி கிளை வாய்க்கால் மதகு அருகே அழுகிய நிலையில் மிதந்த, ஆண் உடலை திங்களூர் போலீசார் மீட்டு, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில் மாயமான யுவராஜ் என்பது தெரிந்தது. இந்நிலையில் பாண்டியம்பாளையம் வி.ஏ.ஓ., சந்திரசேகரனிடம், திங்களூரை சேர்ந்த தங்கராசு, 40, பூவேந்திரன், 45, சரணடைந்தனர். யுவராஜை கொன்றதாக கூறவே, திங்களூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட யுவராஜிடம், ஒன்றரை லட்சம் ரூபாயை தங்கராசு வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி கேட்ட யுவராஜை, தீர்த்துக்கட்ட தங்கராசு முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று இரவு, தங்கராசு மற்றும் பூவேந்திரன் சேர்ந்து, கீழ்பவானி வாய்க்காலுக்கு யுவராஜை அழைத்து சென்றனர். இருவரும் சேர்ந்து வாய்க்காலுக்குள் தள்ளிவிட்டதில் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு, மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு கூறினர்.