மதுரையில் இருந்து பா.ஜ., பேரணி உறுதியாக துவங்கும்: அண்ணாமலை
சென்னை:''மதுரையில் இருந்து, பா.ஜ., மாநில மகளிர் அணியின் பேரணி உறுதியாக துவங்கி, சென்னை வந்து கவர்னரை சந்திக்கும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி:
பா.ஜ., மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து நீதி கேட்பு பேரணி புறப்பட்டு சென்னை வந்து, கவர்னரை சந்திக்கிறது.
பேரணி ஏழு இடங்களில் நின்று, சென்னை வரும். மதுரை மாநகர காவல் துறை, பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. காவல் துறை உத்தரவுக்கு பா.ஜ., கட்டுப்படும். மகளிரணி பேரணியால் எந்த பிரச்னையும் ஏற்படாது.
எப்படி இருந்தாலும் மகளிர் அணியினர் கவர்னரை சந்திப்பர். மதுரையில் இருந்து உறுதியாக எங்கள் பேரணி துவங்கும். முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை அமைதி பூங்கா என்கிறார். தேசிய குற்றவியல் ஆவண அமைப்பு, இந்தியாவில் நடக்கும் குற்றங்களை தொகுத்து அறிக்கை வெளியிடுகிறது. அதன் 2022 அறிக்கையில், தமிழகத்தில் தி.மு.க.,வின் முதல் ஆண்டு ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றம், 8.29 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 8.50 சதவீதம் அதிகரித்துள்ளன. முதல்வர் அமைதி பூங்கா என்று கூறலாம். பெண்களுக்கு எதிராக, குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தமிழகத்தில் இரு ஆண்டுகளாக பணிபுரியாமல் செயலிழந்து உள்ளது. இது, முதல்வருக்கு தெரியாதா. கிராமம் முதல் நகரம் வரை, குற்றங்களை பதிவு செய்ய, காவல் துறை மறுக்கிறது. குற்ற செயல்கள் பதிவு செய்யாததை வன்மையாக கண்டிக்கிறோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பஞ்சப்பாட்டு பாடுவதே வழக்கமாக உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்ந்து வழங்கப்படுகிறது.
மக்களுக்கு செலவு இருக்கும். அரசுக்கு நிதிச்சுமை இருக்கும். அரசு, வாங்கும் கடனை என்ன செய்கிறது. எனவே, பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, பா.ஜ., விவசாயிகள் பிரிவும், வழக்கறிஞர்கள் பிரிவும் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.