டி.ஆர்.ஓ.,வை பெற்றோர் முற்றுகை; விருதை அரசு பள்ளியில் பரபரப்பு
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர் டி.ஆர்.ஓ.,வை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 41 மாற்றுத்திறன் மாணவர்கள் படிக்கின்றனர்.
இவர்களுக்கு என சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர் இளவரசன் பணிபுரிந்து வந்தார். இவரை சமீபத்தில் மாற்று பணிக்கு அனுப்பியதால் மாற்றுத்திறன் மாணவர்களின் கற்றல் திறன் பாதித்தது.
இந்நிலையில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன் பள்ளிக்கு வந்தது குறித்து தகவலறிந்த மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர், மாணவர்களுன் டி.ஆர்.ஓ.,வை முற்றுகையிட்டனர். அப்போது, 10 மாணவர்களுக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் என பணியில் இருக்க வேண்டும்.
ஆனால், 41 மாணவர்கள் உள்ள நிலையில், பணியில் இருந்த ஒருவரையும் மாற்று பணிக்கு அனுப்பி விட்டதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு ஆசிரியர் இளவரசனை மீண்டும் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முறையிட்டனர்.
அவர்களிடம், சி.இ.ஓ.,விடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.ஆர்.ஓ., உறுதியளித்ததை தொடர்ந்து, பெற்றோர் கலைந்து சென்றனர்.
மாணவர்களின் பெற்றோர் டி.ஆர்.ஓ.,வை முற்றுகையிட்ட சம்பவம், பள்ளி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.