கருணாநிதி கொள்கைகளை புறந்தள்ளிய திராவிட மாடல்

4

மதுரை : மதுரை பழங்காநத்தத்தில் பிராமணர்களை பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது:

தி.மு.க., -- தி.க.,வின் ஐ.டி., பிரிவுகள் பிராமண சமூகத்தை தொடர்ந்து அவமதிக்கின்றன. பிராமணர்களுக்கு சலுகைகள் கேட்கவில்லை. அவர்களை அவமானம், கேலி கிண்டல் செய்யாதீர்கள். பிராமணர்கள், அர்ச்சகர், சிவாச்சாரியார்களாக கோவில்கள், ஹிந்து கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்கின்றனர். ஆனால், அவர்களை ஒருமையில் பேசுகின்றனர். அய்யப்ப பக்தர்கள் மனம் புண்படும்படி பாடல் பாடுகின்றனர்.

சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகின்றனர். ஹிந்துக்களை, குறிப்பாக பிராமண சமூகத்தை இழித்தும், பழித்தும் பேசுகின்றனர். பொள்ளாச்சி விவகாரத்தில் குரல் கொடுத்தவர்கள் அண்ணா பல்கலை விவகாரத்தில் எங்கு சென்றனர். திட்டமிட்டு ஹிந்துக்களை, பெண் சன்னியாசிகளை கேவலப்படுத்துகின்றனர்.

சனாதன கொள்கையில் தீவிரமாக உள்ளவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர்.

அண்ணா பல்கலை விவகாரத்தில் 'யார் அந்த சார்' என, போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. நடிகை கஸ்துாரியை வெளிமாநிலம் சென்று கைது செய்கின்றனர். சீமான், பா.ஜ.,வின் குஷ்பு, பா.ம.க.,வின் சவுமியா உட்பட போராடுவோரை கைது செய்கின்றனர். தற்போது, கம்யூனிஸ்ட்களுக்கு ஞானோதயம் வந்துள்ளது. 'போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது' என, உணர்ந்துள்ளனர்.

பிராமணர்கள் அனைத்து சமூகத்தினருடனும் ஒன்றுபட்டு வாழ்பவர்கள். எங்காவது ஜாதி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என அவர்கள் மீது வழக்கு உண்டா? கோவில்களில், அனைத்து சமூகத்தினரையும் அழைத்துச் சென்ற வைத்தியநாத அய்யர், பெண் கல்விக்கு வித்திட்ட ஈஸ்வர சந்திர வித்யாசாகர், உடன்கட்டை ஏறுவதை ஒழித்த ராஜாராம் மோகன்ராய், தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர் பிராமணர்களே.

கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கியவர்கள், அம்பேத்கரின் ஆசிரியர், அவரது 2வது மனைவி பிராமணர்கள் தான்.

நாட்டில் எல்லா புரட்சிகளும் பிராமணர்களால் நடந்தன. தீண்டாமை ஒழிய பாடுபட்டவர்கள் பிராமணர்கள். ஈ.வெ.ரா.விடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தி.மு.க.,வை உருவாக்கியவர் அண்ணாதுரை. ஈ.வெ.ரா., -- தி.க.,வில் பிராமணர்களை சேர்க்கவில்லை. சுதந்திரம் வேண்டாம் என்றார். ஆனால், அண்ணாதுரை தி.மு.க.,வில் பிராமணர்களை சேர்த்தார். சுதந்திர தினத்தை, 'இன்ப தினம்' என்றார்.

கருணாநிதி, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தவர்; ராமானுஜ காவியம் எழுதியவர். அண்ணாதுரை, கருணாநிதி கொள்கைகள் இன்று புறக்கணிக்கப்பட்டு, கிரிப்டோ கிறிஸ்துவர்களும், தி.க., உறுப்பினர்களும் தி.மு.க.,வை கைப்பற்றி, ஸ்டாலினை கைப்பாவையாக்கி, 'திராவிட மாடல்' போர்வையில் சனாதனத்தை ஒழிக்க முயற்சிக்கின்றனர்.

பிராமணர்கள் தி.மு.க.,வுக்கு விரோதிகள் அல்ல. இந்த அரசு, அவர்களை அழைத்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில், பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராமஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ., ஹிந்து அமைப்புகள், பிராமணர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement