மழையால் சேதமான சாலை சீரமைப்பு
விருத்தாசலம்; கருவேப்பிலங்குறிச்சி சாலையில் மழையால் சேமடைந்த பகுதிகளில் பேட்ஜ் ஒர்க் போடும் பணி நடந்தது.
விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி மார்க்கமாக திட்டக்குடி, பெரம்பலுார், திருச்சி, ஜெயங்கொண்டம், அரியலுார், கும்பகோணம், தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
விருத்தாசலம் சித்தலுார் புறவழிச்சாலை ரவுண்டானாவில் இருந்து வேடப்பர் கோவில் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 8 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அங்கிருந்து கருவேப்பிலங்குறிச்சி வரையிலான 3 கி.மீ., தொலைவிற்கு சீரமைப்பு பணிகள் துவங்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்தனர். பள்ளத்தில் சிக்காமல் செல்லும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் வசந்தபிரியா உத்தரவின்படி, பழுதடைந்த சாலையில் தார், ஜல்லி கொட்டி பேட்ஜ் ஒர்க் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.