தார்சாலை பணி கிடப்பில்; விவசாயிகள் கடும் அவதி
நடுவீரப்பட்டு; பத்திரக்கோட்டை-குமளங்குளம் செல்லும் தார்சாலை போடும் பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள், கரும்பு விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையிலிருந்து குமளங்குளம் செல்லும் சாலை ஆக்கிரமிப்பில் இருந்தது. இவற்றை அகற்றி புதிய சாலை அமைக்க கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் சாலை போடும் வழியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி,தனிநபர் இடங்களை பேசி சாலை போடும் பணியினை கடந்த சில மாதங்களுக்கு முன் துவக்கி வைத்தார்.
ஆனால் தற்போது சாலை போடும் பணி இரண்டு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள்,நிலத்திற்கு செல்லும் விவசாயிகள் சாலையில் உள்ள ஜல்லிகள் குத்தி கடும் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் பன்னீர்கரும்புகள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது.
இந்த பன்னீர் கரும்புகளை வாங்கிட வரும் வியாபாரிகள் சாலை சரியில்லாததால் வாகனங்கள் பழுதடைந்துவிடும் என இப்பகுதிக்கு வரவே தயங்குகின்றனர்.இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். ஆகையால் இந்த சாலையை தரமாக உடனடியாக சரி செய்ய பண்ருட்டி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.