புதுச்சத்திரம் பகுதிகளில் நவரை பட்ட நெல் சாகுபடி தீவிரம்! பெருமாள் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் ஆர்வம்

புதுச்சத்திரம்: பெருமாள் ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், புதுச்சத்திரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நவரை பட்ட நெல் சாகுபடியில்விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கடலுார் மாவட்டத்தில் விவசாய தொழிலே பிரதானமாக உள்ளது. சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வீராணம் ஏரியை நம்பியும், திட்டக்குடி பகுதிகளில் வாலாஜா ஏரி நீரை நம்பியும் விவசாயம் செய்யப்படுகிறது.

அதே போன்று, புவனகிரி, பரங்கிப்பேட்டை வரையில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு நீரையும் நம்பியும், புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பெருமாள் ஏரியை நம்பியும் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில், டிசம்பர் துவங்கி ஜனவரி மாதம் வரையில் நவரை பட்ட நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்த பட்டத்தில் 120 நாட்களுக்கு குறைவான வயது கொண்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளான தானூர், சம்பாரெட்டிபாளையம், கருவேப்பம்பாடி, சிறுபாளையூர், மேட்டுப்பாளையம், மேல் பூவாணிக்குப்பம், கீழ்ப்பூவாணிக்குப்பம், ஆலப்பாக்கம், பள்ளிநீரோடை, கம்பளிமேடு, கல்லுக் கடைமேடு, பெரியப்பட்டு, தீர்த்தனகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் பெருமாள் ஏரி பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகள் நவரை பட்டதற்கு ஆண்டுதோறும் நெல் பயிரிட்டு வருகின்றனர். மற்ற பகுதிகளில் புழுதியில் நேரடி நெல் விதைப்பு செய்வர். ஆனால் இப்பகுதி விவசாயிகள் சேடை உழவு செய்து, தெளிவு வைத்து நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர்.

இந்தாண்டு பெருமாள் ஏரியில், மழைநீர் தேங்கி தண்ணீர் நிரம்பியுள்ளது. எனவே இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டுக்கு நவரைப் பட்டத்திற்கு நெல் சாகுபடி செய்ய ஆர்வமடைந்தனர். அதையொட்டி இப்பகுதி விவசாயிகள் சேடை உழவு செய்தனர். பின்னர் இயற்கை உரங்களை தெளித்து, மீண்டும் உழவு செய்து நிலங்களை சமன் செய்தனர்.

தொடர்ந்து சேடையில் நேரடி நெல் விதைப்பு செய்து, நவரை பட்ட சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். பெருமாள் ஏரியில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன், நவரை பருவத்திற்கு நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement