முழுமை பெறாத விழுப்புரம் - கடலுார் நான்கு வழிச்சாலை; சுங்கச்சாவடி திறக்க ஆர்வம் காட்டுவது ஏன்?
விக்கிரவாண்டி: விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், விழுப்புரத்தில் இருந்து கடலுார் பூண்டியாங்குப்பம் வரையிலான 67 கி.மீ., துார பணி முழுமை பெறாத நிலையில், டோல் கட்டணம் வசூலிக்க நகாய் ஆயத்தம் ஆவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 184 கி.மீ., துாரத்திற்கு, நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு 6500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. பணிகள் விரைவாக முடிக்க 4 பகுதிகளாக பிரித்து நகாய் ஒப்பந்தம் செய்தது.
முதற்கட்டமாக, விழுப்புரம் - எம்.என்.குப்பம் வரை உள்ள 29 கி.மீ., பாதையில், 2 சிறு பாலங்கள், 14 மேம்பாலங்களுடன் ரூ. 1400 கோடி மதிப்பிலும், 2வது கட்டமாக எம்.என்.குப்பத்தில் இருந்து கடலுார் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கி.மீ., துார பாதையில் 10 சிறிய பாலங்களும், 18 மேம்பாலங்களுடன் ரூ. 1600 கோடி மதிப்பில் நடந்தது. இருகட்ட பணிகளையும் திலீப் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
முதற்கட்ட விழுப்புரம் - எம்.என்.குப்பம் பணி முடிந்தது என்பதை நகாய் அதிகாரிகள் ஆய்வு செய்து பி.சி.சி., (புரொவிஷனல் கம்ப்ளிஷன் சான்றிதழ்) வழங்கியதை தொடர்ந்து, இச்சாலையில் போக்குவரத்தும் துவங்கியுள்ளது. நகாய் சரியான முறையில் ஆய்வு செய்யாமல் 'கம்ப்ளிஷன்' சான்றிதழ் வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கெங்கராம்பாளையம் கலால் சோதனை சாவடி எதிரே ஆண்டியார்பாளையம் கிராமத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கவில்லை. திருவண்டார்கோவில் மேம்பாலத்தில் இணைப்பு பகுதியில் இருபுறமும் பள்ளம் ஏற்பட்டு அதை சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தில் வடக்கு பக்க பாலப்பணி முடியவில்லை. என்.எம்.குப்பம் சர்வீஸ் சாலையில் பாதுகாப்பு அறிவிப்பு பலகை, புதுச்சேரிக்கு செல்லும் பாதை குறித்த அறிவிப்பு பலகைகள் அமைக்காததால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வழி தெரியாமல் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
பங்கூர் பஸ் நிறுத்தில் சர்வீஸ் சாலை 10 அடி அகலத்திற்கு சுருங்கி உள்ளது. அதே பகுதியில் 4 வழிச்சாலையில் இடைவெளி விடப்பட்டுள்ளதால் தினசரி விபத்துகள் நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் மதகடிப்பட்டு சந்திப்பில் சர்வீஸ் சாலைகள் அகலம் குறைவாக அமைத்துள்ளதால், ஏற்கனவே இருந்த இரு வழிச்சாலையை விட தற்போது இரு மடங்கு டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
மடுகரை நோக்கி செல்லும் பாதை அகலம் குறைவாக இருப்பதால், கன்டெய்னர்கள், பஸ்கள் சர்வீஸ் சாலையை பயன்படுத்துவது கிடையாது. மேம்பாலத்தில் ஏறி, கெங்கராம்பாளையம் அருகே 'யூ டர்ன்' அடித்து (மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி) பக்கமாக சென்று மேம்பாலத்தின் கீழே உள்ள வழியாக மடுகரை செல்கின்றன.
பஸ், கன்டெய்னர் லாரிகள் 'யூ டர்ன்' செய்வதால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வரும் வாகனங்களும், மதகடிப்பட்டு மேம்பாலத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்களும், 'யூ டர்ன்' செய்யும் பஸ், கன்டெய்னர் லாரிகள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரண்டாம் கட்ட சாலை பணியான எம்.என்.குப்பம் முதல் கடலுார் பூண்டியாங்குப்பம் வரையிலான நான்கு வழிச்சாலையில் நகாய் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பாகூர், கடலுார் சாவடி தென்பெண்ணையாறு பாலம், கோண்டூர் மேம்பாலம், பாதிரிக்குப்பம் மேம்பாலம், அரிசி பெரியாங்குப்பம் மேம்பாலம், பெரிய காரைக்காடு ரயில்வே மேம்பாலம் இணைப்புகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடலுார் சாவடி முதல் குடிகாடு வரையிலான 11 கி.மீ., துார சாலை மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டு சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
விழுப்புரம் - கடலுார் பூண்டியாங்குப்பம் வரையிலான சாலையில் நிறைய இடங்களில், ஒரே பாதையில் எதிர் எதிர் திசையில் வாகனங்கள் வருவதால் விபத்துகள் நடந்து வருகிறது. இதுபோன்று அடிப்படை வசதிகள் செய்யாத நிலையில், நகாய் அதிகாரிகள் கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடியை திறந்து டோல் கட்டணம் வசூல் செய்ய தீவிரம் காட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நான்கு வழிச்சாலை பணிகளை நகாய் முழுமையாக ஆய்வு செய்து, மேம்பாலம், சர்வீஸ் சாலைகளை முழுமையாக அமைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்த பின்னரே சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியை துவக்க வேண்டும்.
நாட்டில் பெருகி வரும் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் மனித உயிர் இழப்புகளையும் தவிர்க்கவே பிரதான சாலைகளை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. இதற்காகவே தனியாக 'நகாய்' அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நகாய் அதிகாரிகளின் பொறுப்பற்றத்தனத்தால், புதிதாக அமைக்கப்பட்டு வரும் விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகளை முழுமையாக ஆய்வு செய்யாமலும், அவசர கோலத்தில் 'கம்ப்ளிஷன்' சான்றிதழ் வழங்கி, டோல் பிளாசாவை திறந்து கட்டணம் வலிப்பதற்கு ஆர்வம் காட்டுவதும், விலை மதிப்பற்ற மனித உயிர்களோடு விளையாடுவதும் அதிர்ச்சி அளிக்கிறது. இது, மத்திய அரசின் உயர்ந்த நோக்கத்தை சீர்குலைப்பதாகவே உள்ளது.
நகாய் அதிகாரிகள் விளக்கம்
கெங்கராம்பாளையம் டோல்கேட் ஜன.3ம் தேதி (நேற்று) திறந்து, கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கண்டமங்கலம் ரயில்வே வடக்கு மேம்பாலத்தின் பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளது. இந்த பாலத்தை திறக்க தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து, கண்டமங்கலம் ரயில்வே வடக்கு மேம்பாலம் திறக்கப்பட்டு முழுமையாக போக்குவரத்து தொடங்கிய பிறகே கெங்கராம்பாளையம் டோல்கேட் திறக்கப்பட உள்ளது. அதுகுறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.