பஸ்களுக்கு இடையே சிக்கியவர் நுாலிழையில் உயிர் தப்பினார்
தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இருந்து, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்கு பின்னால் அரசு பஸ் ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இரண்டு பஸ்களும் ஒன்றன் பின் ஒன்றாக பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டுக்கொண்டு வந்தன.
அப்போது, தாமரங்கோட்டையில், அப்பகுதியை சேர்ந்த பரத்,25, என்ற இளைஞர், தனியார் பஸ்சை வழிமறித்து ஏற நிறுத்தியுள்ளார். வேகமாக வந்துக்கொண்டு இருந்த தனியார் பஸ்சின் டிரைவர், திடீரென பஸ்சை நிறுத்தினார்.
அப்போது, பின்னால் வந்த அரசு பஸ், தனியார் பஸ் மீது மோதாமல் இருக்க, இடது புறம் திரும்பியது. இதனால் தனியார் பஸ்சில் ஏற முயன்ற பரத் தடுமாறி இரண்டு பஸ்களுக்கும் இடையே சிக்கி கீழே விழுந்தார். இதில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதில், வேகமாக சாலையில் சென்று கொண்டிருந்தபோது தனியார் பஸ் டிரைவர் திடீரென அலட்சியமாக, பஸ்சை சாலையில் நிறுத்தியதால், பின்னால் வந்த அரசு பஸ், தனியார் பஸ் மோதாமல் இருக்க இடதுபுறம் திருப்பியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
மேலும், இளைஞர் விழுந்த சம்பவம் குறித்த வீடியோ பரவி வருகிறது.