இந்தியாவில் எச்.எம்.பி.வி., பாதிப்பு 3ஆக உயர்வு; பெங்களூரைத் தொடர்ந்து குஜராத்திலும் உறுதி

5

பெங்களூரு: இந்தியாவில் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் இரு குழந்தைகளுக்கு உறுதியான நிலையில், குஜராத்தில் மற்றொரு குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


@நம் அண்டை நாடான சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., எனப்படும், 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்ற தொற்று வேகமாக பரவத் துவங்கியுள்ளது. சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் பலர் முக கவசம் அணிந்து காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது.


இந்த வைரஸ் குறித்து நம் நாட்டின் தேசிய சுகாதார சேவைகள் இயக்குனர் அதுல் கோயல் கூறுகையில், ''சளி போன்ற அறிகுறிகளே இதனால் இருக்கும். வயதானவர்கள், குழந்தைகளுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் கவலையடையும் அளவுக்கு இது தீவிரமான விஷயமில்லை,'' என்றார்.


இந்நிலையில், இன்று (ஜன.,06) இந்தியாவில் முதல் சீனாவின் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று பெங்களூருவில் பதிவாகியுள்ளது. 8 மாத குழந்தைக்கு முதலில் வைரஸ் தொற்று இன்று ஜன.,6ம் தேதி காலை உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, மற்றொரு 3 மாத குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் எச்.எம்.பி.வி., பாதிப்பு எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.


'பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை' என கர்நாடகா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

'கோவிட் - 19' எனப்படும் கொரோனா தொற்று பரவல், 2019 இறுதியில் சீனாவில் துவங்கி, அடுத்த 2 - 3 ஆண்டுகளுக்கு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. அந்த பாதிப்பினால் வீழ்ந்த சர்வதேச பொருளாதாரம், இப்போது தான் மெல்ல சுதாரித்து எழத் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement