பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் பெங்., போலீஸ் கமிஷனர் தயானந்தா உறுதி
பெங்களூரு: ''பெண்கள் அபாயத்தில் சிக்கினால், உடனடியாக 112ல் தொடர்பு கொள்ளலாம். நொடிப் பொழுதில் போலீசார் உதவிக்கு வருவர். பெண்களின் பாதுகாப்பே, எங்களின் குறிக்கோள்,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:
பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். வாடகை வாகனங்களில் பெண்கள் பயணம் செய்யும்போது, வேறு நபர்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, தொந்தரவு கொடுத்தால் உதவி எண் 112ல் தொடர்பு கொள்ளலாம்.
சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் ஹொய்சாளா போலீசார், உதவிக்கு வருவர்.
ஒரு வேளை சம்பவம், சைபர் குற்றம் தொடர்புடையதாக இருந்தால், எண் 1930ல் தொடர்பு கொள்ள வேண்டும்.
தங்களின் மொபைல் போனில் பெண்கள் கே.எஸ்.பி., செயலியில், பயணம் செய்யும் சாலையின் லொகேஷனை பதிவு செய்தால், போலீசாரின் உதவி கிடைக்கும்.
பெண்கள் தங்களின் மொபைல் போனில், கே.எஸ்.பி., செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
ஆபத்து காலத்தில் உதவ, அதிநவீன தொழில்நுட்பத்துடன், இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
எந்த நபராக இருந்தாலும், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கினால், தங்களின் மொபைல் போன் மூலமாகவே, ஆடியோ அல்லது வீடியோ அனுப்பி, சம்பவத்தை விவரித்தால் போலீசார் உதவிக்கு வருவர்.
பெண்கள் தனியாக சாலையில் நடந்து செல்லும்போது, யாராவது தொல்லை கொடுத்தால், போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்க மொபைல் போன் இல்லையென்றால், முக்கியமான சதுக்கங்களில் உள்ள சேப்டி லேண்ட் அருகில் சென்று, ஒரு பட்டனை அழுத்தினால், கமாண்ட் சென்டருக்கு உடனடியாக தகவல் செல்லும்.
இங்குள்ள போலீசார் ஹொய்சாளா போலீசாருக்கு தகவல் தெரிவிப்பர். இவர்கள் அபாயத்தில் உள்ள பெண்களின் உதவிக்கு வருவர்.
பெங்களூரின் முக்கியமான, 50 சதுக்கங்களில் சேப்டி லேண்ட் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பே எங்களின் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.