பெண்கள் மரணம் குறித்து விசாரிக்க மத்திய குழுவை அனுப்புமாறு கடிதம்
சிக்கபல்லாபூர்: 'கர்நாடகாவில் பிரசவத்திற்கு பின் பெண்கள் மரணம் அடைந்தது குறித்து விசாரிக்க, மத்திய குழுவை அனுப்பி வையுங்கள்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவுக்கு, சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதம்:
கர்நாடகாவில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை பிரசவத்திற்கு பின், 348 பெண்கள் இறந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் 217 பேர் இறந்துள்ளனர்.
இதில் 179 இறப்புகள், அரசு மருத்துவமனைகளில் நேர்ந்துள்ளன. பெண்கள் இறப்புக்கு காலாவதியான குளுக்கோஸ் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
பெண்கள் இறப்புக்கான காரணத்தை கண்டறியவும், உண்மையில் நடந்தது என்று விசாரிக்கவும் மத்திய சுகாதார குழுவை கர்நாடகா அனுப்பி வைக்க வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிதாக பிறக்கும் குழந்தைகள், தாய்மார்கள் உயிரை காப்பாற்றுவது மிகவும் அவசியம்.
இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்டால் பிரசவத்திற்கு பிந்தைய பெண்கள் இறப்பு தடுக்கப்படும். மத்திய சுகாதார குழு கர்நாடகா வருகை தந்தால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.