கோவையில் பரபரப்பை கிளப்பிய காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்து; டிரைவர் கைது
கோவை: கோவை காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில், டிரைவர் ராதாகிருஷ்ணன் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து சுமார் 18 மெட்ரிக் டன் காஸ் ஏற்றிக்கொண்டு, 'ஜோதி எல்.பி.ஜி.,' என்ற டேங்கர் லாரி (TN 28 BK 3540) கோவை கணபதி, எப்.சி.ஐ., ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை நோக்கி வந்தது. லாரியை தென்காசி மாவட்டம், கடையநல்லுார், சிவராம பேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 29 ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலை சுமார், 3:00 மணியளவில் கோவை அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் மேம்பால வளைவில், டிரைவர் டேங்கர் லாரியை திருப்ப முயன்றார். கட்டுப்பாடு இழந்த லாரியின், டேங்கர் இருக்கும் பகுதி இடது புறமாக சாய்ந்தது. இதில், லாரியின் முன்பகுதியையும், டேங்கர் பகுதியையும் இணைக்கும் (டேர்ன் பிளேட் பின்) பாகம் உடைந்தது. இதனால், காஸ் நிரம்பிய டேங்கர் சாலையில் கவிழ்ந்தது.
டேங்கரில் இருந்து அளவீடு மீட்டர் (பிரஷர் காஜ்) உடைந்து, அதன் வழியாக காஸ் கசிந்தது. பதறிப்போன டிரைவர் ராதாகிருஷ்ணன், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த, தீயணைப்பு துறையினர், ஐந்து தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன், காஸ் கசிவு ஏற்பட்ட இடத்தில், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பள்ளிகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. காஸ் கசிவால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, மின்சார பணிகள் நிறுத்தப்பட்டன.
11 மணி நேர நீண்ட போராாட்டத்திற்கு பிறகு, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகன பாதுகாப்புடன், டேங்கர் லாரி கணபதியில் உள்ள, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காஸ் கசிவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாததால், அனைவரும் நிம்மதி அடைந்தனர். டேங்கர் லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன், 'மேம்பாலத்தின் மேலே ஏறும்போது திடீரெனலாரியையும், டேங்கரையும் இணைக்கும் பாகம் உடைந்ததால், டேங்கர் தனியாக கழன்று சாலையில் கவிழ்ந்தது' என விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜன.,04) டிரைவர் ராதாகிருஷ்ணன் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இவர் அதிக வேகமாக லாரியை இயக்கி தான் விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.