தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்களே அதிகம்!

10


சென்னை: திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.,06) வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆன்லைன் வழியாகவும், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் நேரடியாகவும் விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.



வாக்காளர் சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறந்தவர்கள் பெயரை நீக்கி, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.,06) வெளியிடப்பட்டது.



இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர் 3.24 கோடி, 3ம் பாலினத்தவர்கள்- 9,120 பேர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை; இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கீழ் வேளூர் தொகுதியில் தான் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர். கீழ்வேளூர் (நாகை) மொத்த வாக்காளர்கள் : 1,76,505

துறைமுகம் (சென்னை) மொத்த வாக்காளர்கள்: 1,78,980


அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லுார் உள்ளது. சோழிங்கநல்லுார் தொகுதி (செங்கல்பட்டு) மொத்த வாக்காளர்கள்: 6,90,958 பேர்



கவுண்டம்பாளையம் தொகுதி (கோவை) மொத்த வாக்காளர்கள்: 4,91,143


'இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குமாறு அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.100/-வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம்.


தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை "1950" என்ற கட்டணமில்லாத்தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement