கவர்னர் வருத்தம் தெரிவிக்கணும்: சொல்கிறார் அமைச்சர் சிவசங்கர்!

59


சென்னை: 'தேசிய கீதத்தை அவமதித்தவர் கவர்னர் ரவி தான். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


சட்டசபையில் உரையை கவர்னர் புறக்கணித்தது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
கவர்னர் நடந்து கொண்ட விதம் தமிழக மக்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. பாரம்பரியமாக தமிழக சட்டசபையில் என்ன நிகழ்வுகள் நடக்குமோ, அதே நிகழ்வுகள் தான் தொடர்ந்து நடக்கிறது. அதனை மாற்ற வேண்டும் என்று கவர்னர் முயற்சிக்கிறார்.
அது நடக்காது என்பதாலும், உரையை கவர்னர் வாசித்தால், தி.மு.க., அரசின் சாதனைகளை அடுக்க வேண்டும் என்பதாலும், இந்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காகத் தான் அவர் இப்படி நடந்து கொண்டார்.


59 பக்கங்களில் அரசின் சாதனைகள் விரிவாக இருக்கிறது. அதனை படிப்பதற்கு தயங்கிக் கொண்டு தான், இன்று இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். கடந்த முறை, தமிழக தலைவர்களின் பெயர்களை சொல்லாமல் மறைத்த கவர்னர், இந்த முறை ஒட்டுமொத்த உரையையும் புறக்கணித்துள்ளார்.


தேசிய கீதம் பாடப்படவில்லை என அவர் காரணம் கூறியுள்ளார். தேச பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகை அவர்தான் என்பது போல் பேசுகிறார். தேசபக்தியில் தமிழக மக்களை மிஞ்சி, அவர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. தேசத்திற்காக தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள்.

இதுவரையில் எத்தனை கவர்னர்கள், முதல்வர்கள் இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எல்லாம் தேசபக்தி கிடையாதா? அ.தி.மு.க., ஆட்சியில் கூட தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கும் சட்டசபை கூட்டம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதைத்தான் தற்போதைய அரசும் செய்கிறது. எனவே, தேசிய கீதத்தை எந்த அவமரியாதையும் செய்யவில்லை. கவர்னர் இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.


ஏற்கனவே, அவரது நடவடிக்கைகளால் தமிழக மக்களால் புறந்தள்ளப்பட்டு வருகிறார். தான் ஒரு நியமிக்கப்பட்ட கவர்னர் என்பதை மறந்து, ஏதோ தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை விட தான் பெரியவர் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார். இதனால், தான் 'கவர்னர் ரவியே வெளியேறு' என்ற நிலையை அவர் ஏற்படுத்திக் கொண்டார். இன்று அவையை அவமதித்ததற்காக கவர்னர் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்.


தேச பக்தியில் எங்கள் முதல்வருக்கோ, தி.மு.க.,வுக்கு பாடம் நடத்தக் கூடிய தகுதி இவருக்கு கிடையாது. சீனப் போர் முதல் கார்கில் போர் வரையில் தி.மு.க., வோ, அரசின் சார்பாகவோ, அதற்கான நிதி வழங்கியிருந்தால், மற்ற மாநிலங்களை மிஞ்சும் அளவுக்கு இருக்கும்.
தேசிய கீதத்தை அவமதித்ததே இந்த கவர்னர் தான். தேசிய கீதம் முடியும் வரை காத்திருக்காமல், கடந்த முறையும், இந்த முறையும் அவர் தான் வெளியேறினார். எனவே, அவர் தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.


பதவி காலம் முடிந்த பிறகும், மத்திய அரசோ, பிரதமரோ, ஜனாதிபதியோ சொல்லாமல், கவர்னர் ரவி இந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கு அவர் தான் அவமானப்பட வேண்டும். அவரே ராஜினாமா செய்து சென்றால் தான், அவர் படித்த ஐ.பி.எஸ்.,க்கு அழகு, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement