அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபலமான சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் போராட்டம் ஒரு புறம், மாணவிகளின் மீதான பாதுகாப்பு பற்றிய கேள்விகள் ஒருபுறம் என சென்னை பல்கலைக்கழகம் பெரும் நெருக்கடிக்கு ஆளானது.
கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விழிப்பாக இருக்கும் நிலையில், வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுததி இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.
சம்பவ இடத்துக்கு மோப்பநாய்களை அழைத்துக் கொண்டு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். போலீசாரும் சோதனையில் இறங்கினர். பலமணி நேர சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாத நிலையில் இது வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது.