கண்ணே தெரியாத நிலையில் 2வது நாளாக அடர்பனி! முடங்கியது விமான, ரயில்சேவை
புதுடில்லி; எதிரே வருவது தெரியாத அளவுக்கு நிலவும் பனிமூட்டம் காரணமாக டில்லியில் விமானம், ரயில் சேவை 2வது நாளாக முடங்கி உள்ளது.
@1brஉ.பி., புதுடில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பனிப்புகை சூழ்ந்ததால் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. வழக்கத்துக்கு மாறாக நேற்று(ஜன.3) ரயில் மற்றும் விமான சேவைகள் முற்றிலும் முடங்கின.
இந் நிலையில் 2வது நாளாக இன்றும் எதிரே உள்ளது கண்ணுக்கு தெரியாத அளவு அடர் பனிமூட்டம் காணப்படுகிறது. பார்வை திறன் 100 அடிக்கு அப்பால் உள்ளவை தெரியாத நிலை நிலவுகிறது. கடும் பனிபொழிவால் விமான ஓடுபாதை மூடியபடி காணப்பட்டதால் தலைநகர் டில்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
எங்கு பார்த்தாலும் கடும் புகைபோல் பனிபடர்ந்து இருந்ததால் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 250க்கும் அதிகமான விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் நிலவியது. காலநிலை மாறுபாட்டால் 40க்கும் அதிகமான விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பனிமூட்டத்தால் விமான சேவை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயணிக்குமாறு ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கோல்கட்டா விமான நிலையத்தில் 40 விமானங்களின் சேவை தாமதமாகி உள்ளதோடு, 5 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
சண்டிகர், ஆக்ரா, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களிலும் இதே நிலை நீடிப்பதால் விமானம், ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். டில்லி, நொய்டா, லக்னோ, கர்னல், காசியாபாத், ஜெய்பூர் ஆகிய நகரங்களில் தண்டவாள பாதை தெரியாத நிலை நிலவுவதால் ரயில்கள் புறப்பாடு, வருகையில் மாற்றம் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
டில்லி மட்டுமல்லாது பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடும் பனி காணப்படுகிறது. அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து (1)
Constitutional Goons - Tamilnadu,இந்தியா
04 ஜன,2025 - 15:43 Report Abuse
குருடர்களின் காட்டுமிராண்டிகள் ஆட்சி மத்தியில் உள்ளது
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement