கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபையை தொடர்ந்து அவமதிக்கும் கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு கூடியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில கவர்னர் வாசிப்பது சட்டசபை ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த கவர்னர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழக சட்டசபையும் தொடர்ந்து அவமதிக்கும் கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.