மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் வந்தே பாரத் ரயில்; ஆடாமல் அசையாமல் சென்றது தண்ணீர் டம்ளர்!

13

புதுடில்லி: மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தின் போது, ஒரு டம்ளர் தண்ணீர் ஆடாமல் அசையாமல் இருந்த வீடியோவை, சமூகவலைதளத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.


நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் 5க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதி நவீன சொகுசு வசதி கொண்ட இந்த ரயில்கள் ஏசி வசதி, பயோ டாய்லட், தானியங்கி கதவு என பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை. பயணிகள் மத்தியில் வரவேற்பு கொண்ட இந்த ரயில்கள் இருக்கை வசதி மட்டுமே உள்ளது.


படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் , படுக்கை வசதி கொண்ட ரயிலின் சோதனை ஓட்டம் குறித்து வீடியோ ஒன்றை, சமூக வலைதளத்தில், அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.


ரயில் மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்கிறது. ரயிலுக்குள் கண்ணாடி டம்ளரில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர், ஆடாமல் அசையாமல் இருப்பதை வீடியோவில் காண முடிகிறது. இது குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறி இருப்பதாவது: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் கடந்த 3 நாட்களாக, நன்றாக நடந்து வருகிறது. 180 கி.மீ., வேகம் வரை சோதனை வெற்றிக்கரமாக நடந்தது. விரைவில் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து, மக்கள் பயன் அடைய வேண்டும். இதனால் சோதனை ஓட்டம் இந்த மாதம் முழுவதும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலியில் மொபைல் போன் சார்ஜிங் வசதி, பாதுகாப்புக்காக கேமரா, பொது அறிவிப்பை வெளியிட ஸ்பீக்கர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி. முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிகள் சுடு தண்ணீரில் குளிக்கும் வசதி உட்பட ஏராளமான சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement