தமிழர் பெருமையை நிலை நிறுத்த கவர்னர் உறுதி!
சென்னை; தேசியக் கீதத்தை அவமதித்ததால் சட்டசபையை விட்டு கவர்னர் வெளியேறியதாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று(ஜன.6) காலை 9.30க்கு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள தலைமைச் செயலகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் உரிய மரியாதை தரப்பட்டது.
பின்னர் சபாநாயகர் அப்பாவு, கவர்னரை சட்டசபைக்குள் அழைத்துச் சென்றார். முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்ததால் கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார்.
இதுகுறித்து கவர்னர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சட்டசபையில் இன்று மீண்டும் இந்திய அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் கடமை என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் அந்த விளக்க பதிவானது, சில நிமிடங்களில் கவர்னர் எக்ஸ் தள வலை பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறிக்கை எக்ஸ் தள பக்கத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
தமிழக கவர்னர் தமிழகத்தின் மொழி, கலாசாரம் மற்றும் மரபுகள் உள்ளிட்ட மாநிலத்தின் செழுமையான கலாசார பாரம்பரியத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர். தமிழ்த்தாய் வாழ்த்து என்ற தமிழ் மாநில பாடலுடைய புனிதத்தை எப்போதும் ஒவ்வொரு நிகழ்விலும் பயபக்தியுடன் அவர் பாடுகிறார்.
உலகின் பழமையான, புகழ்பெற்ற தமிழ் மொழியானது எண்ணற்ற இந்தியர்களின் இதயத்தில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அதை கவர்னர் முழு மனதுடன் பகிர்ந்து கொள்கிறார். மாநிலத்திற்கு உள்ளேயும், தேசிய தளத்திலேயும் தமிழ் கலாசாரத்தை, அதை மேம்படுததுவதற்கு ஒவ்வொரு வகையிலும் ஆதரவு அளித்து இருக்கிறார்.
அரசியலைமைப்புச் சட்டத்தை மதித்து, சட்ட கடமைகளை பின்பற்றுவது கவர்னரின் கடமை. தேசிய கீதத்துக்கு மரியாதை தருவது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ள அடிப்படை கடமையாகும். பெருமைக்குரிய விஷயமும் கூட.
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில சட்டசபையிலும் கவர்னர் உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. பலமுறை இதுபற்றிய நினைவூட்டல்களை முன்னரே தெரிவித்த பின்பும், அவை வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது.
இன்று(ஜன.6) கவர்னர் உரை தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அல்லது இசைக்கப்படாமல் இருந்த போது கவர்னர், முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அது திட்டவட்டமாக மறுக்கப்பட்டது.
கவர்னர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அல்லது இசைக்கப்படாமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். இதனால் அதிர்ச்சி அடைந்த கவர்னர் மாளிகையை விட்டு வெளியேறினார்.
கவர்னர், அரசியலமைப்பு விழுமியங்களை நிலை நிறுத்துவதற்கும் தமிழரின் பெருமையை நிலைநிறுத்தி, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதத்துக்கான மரியாதையை மீட்டு எடுப்பதற்கும் தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.
இவ்வாறு அற்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.