ஆம் ஆத்மிக்கு எதிராக காங்., பாஜ., கூட்டணி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

9


புதுடில்லி: '' டில்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ.,வும், காங்கிரசும் இணைந்து செயல்படுகின்றன,'' என அம்மாநில முன்னாள் முதல்வரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் டில்லியில் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என தேர்தலில் வாக்குறுதி அளித்தும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும், ஆனால் டில்லி சட்டசபை தேர்தலில் இதே வாக்குறுதியை அக்கட்சி அறிவித்து உள்ளது என குற்றம்சாட்டினர்.


இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது: போராட்டம் நடத்திய பெண்கள், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பஞ்சாபில் இருந்து வரவில்லை. அம்மாநில பெண்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். டில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு எதிராக ஒன்றாக போட்டியிடுகிறோம் என காங்கிரசும், பாஜ.,வும் அறிவிக்க வேண்டும்.

காங்கிரஸ் எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அக்கட்சியை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. நான் பதவியில் இல்லாத காரணத்தினால் குடிநீர் கட்டணம் அதிகமாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அது தவறு என நினைப்பவர்கள் அதனை செலுத்த வேண்டாம் என நான் வெளிப்படையாக அறிவிக்கிறேன். ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததும், அந்த கட்டணங்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Advertisement