வாறுகாலில் மண், தெருக்களில் டூவீலர் ஆக்கிரமிப்பு; விருதுநகர் 20வது வார்டு மக்கள் அவதி

விருதுநகர்; வாறுகாலில் நிறைந்து உள்ள மண்ணால் கழிவு நீர் செல்வதில் தடை, தெருக்கள் டூவீலர்கள் பார்க்கிங் பகுதியாக மாற்றி ஆக்கிரமிப்பு, பேவர் பிளாக் கற்கள் ரோடுகள் மேடு பள்ளம், பள்ளி மாணவிகளுக்கு சமூக விரோதிகள் தொந்தரவு என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் 20வது வார்டு மக்கள்.

விருதுநகர் 20 வது வார்டில் நாச்சி, சுலோச்சனா, சேக்கிழார், சந்திகூடம், தெற்கு ரத வீதி, தபால் அலுவலகம், பெ.சி., பழக்கடைச் சந்து, வில்காரன் கோயில் தெருக்கள் உள்பட பல பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு ரத வீதி வழியாக செல்லும் வாறுகாலில் மண் நிறைந்து கழிவு நீர் செல்ல முடியாத நிலையே தொடர்கிறது. மேலும் குப்பைகளை வாறுகாலில் கொட்டுவதால் அடைப்பு ஏற்படுகிறது. தபால் அலுவலகம் தெருவில் கடந்த ஒரு வாரமாக மின் விளக்கு செயல்படாமல் உள்ளது. மார்கெட் பகுதிக்கு அருகே இருப்பதால் கடைகளுக்கு டூவீலரில் வருபவர்கள் வாகனங்களை தெருக்களில் நிறுத்தி செல்கின்றனர்.

இந்த வார்டில் உள்ள பல தெருக்களில் இன்று வரை பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை. இங்குள்ள குறுக்குத்தெருக்கள் வழியாக பள்ளி, கல்லுாரிக்கு சென்று வரும் மாணவிகளை சில சமூக விரோதிகள் பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைத்து, காலை, மாலை நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். சந்திகூடத்தெருவில் உள்ள காய்கறி மார்கெட்டில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர்.

ரத வீதி பகுதியில் உள்ள வாறுகாலில் மண், குப்பை நிறைந்து கழிவு நீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. இதனால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே மண் நிறைந்த வாறுகால்களை சுத்தம் செய்ய வேண்டும்.

- தைரியராஜ், தனியார் வங்கி ஊழியர்.

காய்கறி மார்கெட்டிற்கு டூவீலர்களில் வருபவர்கள் அதன் அருகே உள்ள தெருக்களில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் மற்ற வாகனங்கள் தெருக்கள் வழியாக செல்ல முடிவதில்லை. தெருக்கள் டூவீலர்கள் பார்க்கிங் பகுதியாக மாறுவதை தடுக்க வேண்டும்.

-ஆறுமுகசாமி, கொலு பொம்மை உற்பத்தியாளர்.

டூவீலர்கள் ஆக்கிரமிப்பு



தபால் அலுவலக தெருவில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் நடந்து, வாகனங்களில் செல்பவர்கள் அல்லல்படுகின்றனர். இதில் செயல்படாமல் உள்ள மின் விளக்கை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--- சந்திரன், வத்தல் வியாபாரி.

எரியாத விளக்குகள்



எரியாத விளக்குகள்

Advertisement