கல்யாணம் ஆயிடுச்சா ஆதாரம் காண்பி: ஓயோ போட்ட விதியால் சலசலப்பு; சமூகதளங்களில் கலகலப்பு!!

14


முன்பெல்லாம் ஹோட்டல்கள், லாட்ஜ்களில் ரூம் புக் செய்ய வேண்டுமென்றால், நேரடியாக சென்று அங்குள்ள ரிசப்சனில் கேட்டு, அவர்களிடம் ஏதேனும் அடையாள அட்டையை காண்பித்தால்தான் 'புக்' செய்ய முடியும். அதனை எளிதாக்கும் நோக்கில், எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த ஹோட்டல், லாட்ஜ்களில் வேண்டுமானாலும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை ஓயோ இணையதளம் ஆரம்பித்தது. இந்த தளத்துடன், பல ஹோட்டல்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

அதில், 18 வயது நிரம்பியவராக இருந்தால் போதும், ஹோட்டல் / லாட்ஜ்களை தேர்வு செய்வதுடன், அங்குள்ள வசதிகள், அறையின் உள்தோற்ற புகைப்படங்கள் போன்றவற்றையும் பார்த்து, வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் பார்த்து 'புக்' செய்து கொள்ளலாம். மக்களுக்கு எளிதான சேவைகளை வழங்க முன்னெடுக்கும் எந்த முயற்சியானாலும், அதனை தவறாக பயன்படுத்துவதற்கும் 'சிலர்' இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். அப்படித்தான் இந்த ஓயோ இணையதளத்தின் முன்பதிவை, தவறான விஷயங்களுக்காக பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

காதலர்கள், தங்கள் பிரைவசிக்காக கூட ஓயோ மூலமாக ரூம் புக் செய்கின்றனர். அதில் சில தவறான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் விபச்சாரம் கூட நடந்தது. இப்படி நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் ஓயோ நிறுவனம் அதிரடியான ஒரு முடிவை எடுத்தது. அதாவது, 'திருமணமாகாத ஜோடிகளுக்கு ரூம் கிடையாது. முன்பதிவு செய்யும்போதும், ஹோட்டலுக்கு வரும்போதும், ஜோடிகள் திருமண உறவை உறுதி செய்யும் திருமணச் சான்றிதழ் போன்றவற்றை காட்ட வேண்டும்' என்று அறிவித்துள்ளது.
Latest Tamil News
திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே ரூம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பலர் வரவேற்றும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர். இணையதளத்தில் பல்வேறு மீம்ஸ்களும் பறக்கின்றன. ஓயோவின் அறிவிப்பால் ஜோடி கிடைக்காத 'சிங்கிள்ஸ்' ஆனந்த கூத்தாடுவது போலவும், ரூம் புக் செய்பவர்களில் யாராவது 'ஒருவர்' திருமணம் செய்திருந்தாலும் அனுமதிப்பீர்களா என நக்கலடிப்பது போலவும், ஓயோ என்பதன் ஆங்கில எழுத்தான OYO என்பதில் இரண்டு 'ஓ' எழுத்தையும் திருமண மோதிரம் போன்று வடிவமைத்தும் மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர்.

Advertisement