கன்னிவாடியில் அதிகரிக்கும் பனிப்பொழிவு; குறைந்தபட்ச வெப்பநிலையாக 7 டிகிரி செல்சியஸ் பதிவு

கன்னிவாடி; இந்தாண்டின் மிக குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலையாக கன்னிவாடியில் 7 டிகிரி செல்சியஸ் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாளாக பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.

பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்தபோதும் மலையடிவார கிராமங்களில் பனிக்காற்று வீசுகிறது. நகர்புறத்தை விட மலையடிவார கிராமங்களான கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, சித்தரேவு, சித்தையன்கோட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் பகலிலும் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து வருகிறது.கணிசமான அளவில் அதிகரித்து வரும் பனிப்பொழிவால் குறைந்தபட்ச வெப்பநிலையானது முந்தைய நாட்களைவிட மேலும் குறைய துவங்கியுள்ளது.

கன்னிவாடி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன வானிலை மையம் விஞ்ஞானி தேவராஜ் கூறியதாவது: வானிலை மைய தகவலின்படி 2024 ஏப்ரல் முதல் தற்போது வரையிலான இந்த நிதியாண்டில் மிக குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலையாக 7 டிகிரி செல்சியஸ் தற்போது பதிவாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இதே நிலை இருந்தபோதும் 10 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே பதிவானது.

அடுத்த சில நாட்களுக்கு இரவு நேர வெப்பநிலை மிக குறைந்த அளவிலே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கேற்ப பணிகள், பாதுகாப்பான நடமாட்டத்தை மாற்றியமைத்து கொள்ள வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பான கூடாரங்கள், பக்கவாட்டில் சணல் சாக்குப்பைகளால் திரையிடுவது, காலை சூரிய உதயத்திற்கு 2 மணி நேரத்திற்கு பின் மேய்ச்சலுக்கு அனுப்புவது உள்ளிட்ட பராமரிப்பு முறைகளை கையாளலாம் என்றார்.

Advertisement