யு.பி.ஐ., சேவை: புதிய அம்சங்கள்
புதுடில்லி:பொருட்கள், சேவைகள், வரிகள், கடன் இ.எம்.ஐ., போன்றவற்றுக்கு பணம் செலுத்தும்போது, யு.பி.ஐ., பரிவர்த்தனை தற்போது மிக பிரபலமாகியுள்ளது. இதன் சலுகையை விரிவுபடுத்தவும், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், இதில் தொடர்ந்து பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்தாண்டு முழுதும் யு.பி.ஐ., எனப்படும் 'யுனைடெட் பேமென்ட் இன்டர்பேஸ்'சில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுமட்டுமின்றி, சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது.
வெளிநாட்டில் கேஷ்பேக்
ரூபே ஜெ.சி.பி., கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஜப்பான், சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் அனைத்து சர்வதேச 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் ஸ்வைப்பிங் மிஷின் வாயிலான பரிவர்த்தனைகளிலும், 25 சதவீத கேஷ்பேக் பெறலாம்.
வெளிநாடுகள்
வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு யு.பி.ஐ., பெரும் உதவிகரமாக மாறியுள்ளது. கடந்த 2024ல் யு.பி.ஐ.,யை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக மாறியது, பிரான்ஸ்.
இது தவிர, நேபாளம், கத்தார் ஆகியவையும் கடந்தாண்டில் யு.பி.ஐ., வசதியை செயல்படுத்தியுள்ளன. தற்போது, பூடான், மொரீஷியஸ், சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளும் யு.பி.ஐ., பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்கின்றன.
சர்வதேச எண்னுடன் இணைப்பு
நீங்கள் என்.ஆர்.ஐ., அல்லது என்.ஆர்.ஓ., கணக்கு வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர் என்றால், யு.பி.ஐ., பரிவர்த்தனை களை எளிதாக செய்யலாம். ஐ.சி.ஐ.சி.ஐ.,யின் 'ஐமொபைல், பீம், போன்பே' போன்ற சர்வதேச மொபைல் எண்களை யு.பி.ஐ., வாயிலாக நீங்கள் எளிதில் இணைக்கலாம்.
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஹாங்காங், மலேஷியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், அமெரிக்கா நாடுகளின் தொலைபேசி எண்களை நீங்கள் வைத்திருந்தால், யு.பி.ஐ., இணைப்பிற்கு தகுதி பெறலாம்.
ஒன் வேர்ல்டு வாலட்
இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணியருக்கும், 'யு.பி.ஐ., ஒன் வேர்ல்டு வேலட்'ஐ யு.பி.ஐ., கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது.
இதைப் பயன்படுத்தி, கியூ.ஆர்., கோடுகளை ஸ்கேன் செய்து, இந்தியாவில் உள்ள வணிக நிறுவனங்களில் பணம் செலுத்தலாம்.
பயணியர் தங்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை மட்டும் பயன்படுத்தி கே.ஒய்.சி., செயல்முறைகளை மேற்கொள்ள முடியும். செலுத்தியது போக மீத தொகை இருந்தால், அவரவர் கணக்கில் திருப்பி செலுத்தப்படும்.
5 பேர் வரை இணைக்கலாம்
கடந்தாண்டு இறுதியில், யு.பி.ஐ., மேலும் ஒரு வசதியை அளித்தது. இதன் வாயிலாக, பிரதான யு.பி.ஐ., பயனர், தான் மட்டுமின்றி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் வரை இணைத்து, ஒரு யு.பி.ஐ., குழு வட்டத்தை உருவாக்கலாம்.
இதில், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிவர்த்தனை செய்யும் அனுமதியை அளிக்கலாம். தன் வங்கிக் கணக்கில் இருந்து, அவர்களுக்கான பரிவர்த்தனைக்கான வரம்புகளையும் முதல் நிலை பயனர் நிர்ணயிக்கலாம்.
இதன்படி, முழுபிரதிநிதித்துவம் பெற்ற ஒவ்வொரு பயனரும் அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரை செலவிடலாம்.
விபத்து காப்பீடு
ரூபே கார்டுதாரர்கள், தனிப்பட்ட விபத்து காப்பீடு பெற தகுதி பெறுகின்றனர். இது உலகளாவிய கவரேஜை வழங்குகிறது. நிரந்தர முழு ஊனத்திற்கும் தீர்வு அளிக்கிறது. இதன்படி, ரூபே பிளாட்டினம் கார்டுதாரர்கள் 2 லட்சம் ரூபாய் காப்பீடு தொகைக்கு தகுதியுடையவர்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுதாரர்கள் 10 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையை பெறுவர். எவ்வாறாயினும், இதற்கு தகுதி பெற, விபத்து நடந்த தேதிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக குறைந்தபட்சம் ரூபே கார்டு வாயிலாக நிதி பரிவர்த்தனையை ஏதேனும் பாயின்ட் ஆப் சேல் அல்லது இ காமர்ஸ் தளங்கள் வாயிலாக மேற்கொண்டிருக்க வேண்டும்.
வாட்ஸாப்பில் யு.பி.ஐ.,
'வாட்ஸாப் பே' சேவைகளை சில வாட்ஸாப் பயனர்கள் மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்தனர். இதற்கான வரம்பை, கடந்த டிசம்பரில் என்.பி.சி.ஐ., எனப்படும் 'நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன்' நீக்கியது.
இதன் வாயிலாக, அனைத்து வாட்ஸாப் பயனர்களும், வாட்ஸாப் பே வழியாக, க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து, யு.பி.ஐ.,யை பயன்படுத்த முடியும்.