சிம்ஸ் பூங்காவில் பூத்த 'ரோடோடெண்ட்ரான்' மலர்கள்; சுற்றுலா பயணிகள் வியப்பு

குன்னுார்; குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 'ரோடோடெண்ட்ரான் ஹார்போரியம்' மரத்தில், மலர்கள் பூத்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 86 தாவர குடும்பங்களை சேர்ந்த, 1,200 வகையான தாவரங்கள் உள்ளன. அதில், ருத்ராட்சம், காகித மரம், டர்பன், கமிலியா, பீனிக்ஸ் அகாசியா உட்பட பல்வேறு அரிய வகை மரங்களும் உள்ளன.

இவற்றில் இமயமலையில் காணப்படும் 'ரோடோடெண்ட்ரான் ஹார்போரியம்' மரங்கள், பூங்கா படகு இல்லம் பகுதியில் உலக வரைபடம் அருகே உள்ளது. இந்த மரத்தில் தற்போது மலர்கள் பூத்துள்ளது. படுக மொழியில் 'பில்லி ஹூ'என அழைக்கப்படும் இந்த மலர்களை,

ஹெத்தையம்மன் பண்டிகையின் போது, கோவிலில் வைத்து படுக இன மக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். தமிழில் மலைப்பூவரசு, மலையாளத்தில் அலஞ்சி என அழைக்கப்படும் இந்த மலர்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் அதிகம் வளர்கிறது.

தோட்டக்கலை துறையினர் கூறுகையில்,'ரோடோடெண்ட்ரான், நேபாள நாட்டின் தேசிய மலர்; நாகாலாந்து மாநில மலர்; உத்தரகாண்ட் மாநில தேசிய மரம். இந்த மலர் மருத்துவத்திலும் அதிக குணம் வாய்ந்ததாக உள்ளது.

ஆண்டிற்கு ஒரு முறை நவ., டிச., மாதங்களில் இதன் சீசன் காலம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சீசனில் மலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,' என்றனர். இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்து 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.

Advertisement