பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்; 2,195 விவசாயிகள் பயன்
ஊட்டி; நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், பிரதம மந்திரி நுண்ணீர்பாசன திட்டமானது, 2015-16 ஆண்டில் இருந்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ். தெளிப்பு நீர் பாசன கருவிகள், 100 சதவீதம் மானியத்தில் சிறு,குறு விவசாயிகளுக்கும், இதர விவசாயிகளுக்கு,75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
தெளிப்பு நீர் பாசன திட்டத்தின் கீழ் பயன் பெற, குறைந்த பட்சமாக, ஒரு ஏக்கரில் இருந்து, ஐந்து ஏக்கர் வரையிலும், சிறு, குறு விவசாயிகள் நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு என்ற வலைதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இத்திட்டத்தில், 2021--22ம் ஆண்டு முதல் 2023--24ம் ஆண்டுவரை, 1833.25 எக்டர் பரப்பளவில், 2,195 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். மேலும், 2024--25ம் ஆண்டு, 400 எக்டர் பரப்பளவில் தெளிப்பு நீர் பாசனம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.