உரம் இருப்பை கண்காணிக்க சிறப்பு குழு; வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் உரம் இருப்பு மற்றும் தேவை குறித்து கண்காணிக்க வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிச., மாத முடிவில், 'யூரியா, 970 மெட்ரிக் டன்; 'டிஏபி', 398 மெட்ரிக் டன்; பொட்டாஷ், 786 மெட்ரிக் டன்; சூப்பர் பாஸ்பேட், 340 மெட்ரிக் டன் மற்றும் காம்பிளக்ஸ் 660 மெட்ரிக் டன்,' என, உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உரம் இருப்பு மற்றும் தேவை குறித்து கண்காணிக்க வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தகுழு, நீலகிரி மாவட்டத்திற்கு தேவையான உரங்கள் இருப்பை தினந்தோறும் கண்காணிக்கும். இந்த குழுவில் வேளாண்மை உதவி இயக்குனர் லாவண்யா ஜெயசுதா - 9487966179; வேளாண்மை அலுவலர் அமிர்தலிங்கம், 7464827909 ஆகியோர் உள்ளனர்.

கட்டாயப்படுத்த கூடாது



மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்கள் வாங்க வரும் விவசாயிகளை இணை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்த கூடாது. உரங்களை விற்பனை செய்யும் போது உர மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட அதிகம் வைத்து விற்பனை செய்ய கூடாது. விவசாயிகள் வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும்.

இவ்வாறு விதிகளை மீறி விற்பனை செய்வது, உரம் (கட்டுப்பாட்டு) ஆணை-1985-யை மீறும் செயலாகும். இதை மீறி விற்பனை செய்யும் உர விற்பனையாளர்களின் உர உரிமம் ரத்து செய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் சட்டம் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களுக்கு மாநில அளவிலான- 9363440360 என்ற 'வாட்ஸ்- ஆப்' எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement