எங்க வீட்டுப் பிள்ளை 'வினோத்' ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் பெருமிதம்

அலங்காநல்லுார்,; ஜல்லிக்கட்டு களத்தில் காளையர்களிடம் பிடி கொடாமல் பாய்ந்து, திமிர் காட்டும் காளை வலசை வினோத், வீட்டில் மழலைகளின் பாசத்திற்கும் பெட்டிப் பாம்பாக அடங்கி கிடப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

அலங்காநல்லுார் அருகே வலசை தொழிலாளி சத்யராஜ். வீட்டில் 3 காளைகள் வளர்த்து வருகிறார். அதில் 'வினோத்' என்ற காளை உள்ளூர் போட்டிகள் மட்டுமின்றி, கோவை, புதுக்கோட்டை உட்பட ஏழு ஆண்டுகளாக 29 வாடிவாசல்களில் பாய்ந்து வெளியேறி, பிடிபடாத காளையாக வலம் வருகிறது.

பாய்ந்து வரும் காளையரை பந்தாடி பறக்கும் வினோத், அவர்களது தங்களுக்கு பெருமை சேர்த்து வருவதாக குடும்பத்தினர் பெருமிதம் அடைகின்றனர்.

இத்தனை தீரம் காட்டினாலும், வீட்டுக் குழந்தைகளிடம் பாசம் காட்டுவதும், அவர்கள் உண்ணும் கடலை மிட்டாய், பிஸ்கட் போன்ற உணவுகளையும் தன் அசைவுகளால் கேட்டு வாங்கி உண்பதாகவும் தெரிவித்தனர்.

காளை உரிமையாளர் சத்யராஜ் கூறியதாவது: சிறு கன்றாக வாங்கி வளர்த்து வருகிறோம். 'வினோத்' காளை என் மகள் திவ்யாவுக்கு 11, தம்பியாகவும், மகன் கவினுக்கு 6, அண்ணனாகவும் உள்ளான். இருவருமே அவனை நடைபயிற்சிக்கு அவிழ்த்து செல்வார்கள்.

வாடிவாசலில் வீரர்கள் நிற்பதை கணித்து பாய்ந்து வெளியேறுவான். எல்லைக் கோட்டை தாண்டியதும் என்னைப் பார்த்து நின்று விடுவான். தினமும் ஒரு படி பச்சரிசி வடித்த கஞ்சி, வைக்கோல்தான் அவனுக்கு பிடித்த உணவு. அவ்வப்போது எங்களிடம் இட்லி தோசை, வடைகூட வாங்கி உண்பான். மற்ற 2 காளைகளுக்கும் பருத்தி விதை, புண்ணாக்கு போன்ற உணவை வழங்குகிறேன்.

பீரோ, சைக்கிள் போன்ற இவனது பரிசுகளை, தட்சணை மட்டும் பெற்று குலதெய்வத்திற்கு தந்து விடுவேன் என்றார்.

Advertisement