கேரளாவில் தாய், 2 குழந்தைகளை கொன்ற வழக்கு; 19 ஆண்டுகளுக்கு பின் 2 ராணுவ வீரர்கள் புதுச்சேரியில் கைது

புதுச்சேரி : கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் திருமணம் ஆகாத பெண் ரஞ்சனி, 25; கடந்த 2006ம் ஆண்டு இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அதையடுத்து, ஒருசில மாதங்கள் கழித்து, குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற ரஞ்சனியின் தாய் உள்ளூரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றபோது, ரஞ்சினி மற்றும் அவரது 2 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

போலீஸ் விசாரணையில், ராணுவ வீரர் திவில்குமாருடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தை பிறந்துள்ளது.குழந்தைகளுக்கு திவில்குமார் தான் தந்தை என கூறியதை அவர் ஏற்கவில்லை. இதனால் ரஞ்சனிக்கும், திவில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது.

இப்பிரச்னை மகளிர் ஆணையத்திற்கு சென்றது. குழந்தைகளுக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

அதனால், திவில்குமார், தன்னுடைய நண்பரான ராணுவ வீரர் கண்ணுார் ராஜேஷ் உடன் இணைந்து ரஞ்சினி மற்றும் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

மதன்கோட் ராணுவ படை பிரிவில் பணியாற்றிய இருவரும் ராணுவத்தில் இருந்து தப்பியோடி விட்டதாக ராணுவம் அறிவித்தது.

திவில்குமார் மற்றும் ராஜேஷ் இருவரும் தேடப்படும் குற்றவாளி எனவும், இருவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு என, கேரள போலீஸ் அறிவித்தது.

இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.சி.பி.ஐ., ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் இருவரையும் தேட துவங்கியது.

ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் ராஜேஷ் படத்தை தற்போது உள்ளதுபோல் வடிவமைத்தனர். அந்த புகைப்படத்தில் உள்ள நபர் புதுச்சேரி சேதராப்பட்டு அருகே வசிப்பதை சி.பி.ஐ., கண்டுபிடித்தது. ராஜேஷ் தனது பெயரை பிரவீன்குமார் என்றும், திவில்குமார் தனது பெயரை விஷ்ணு என மாற்றிக் கொண்டு புதுச்சேரியில் திருமணம் செய்து குழந்தைகளுடன், சொத்துக்கள் வாங்கி குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த சி.பி.ஐ., திவில்குமார், ராஜேஷ் இருவரையும் கைது செய்து, எர்ணாக்குளம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement