ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்கப் போவது யார் யார்?

75

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ., நாம் தமிழர் கட்சி ஆகியன களமிறங்க முடிவு செய்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மறைவால், காலியான ஈரோடு சட்டசபைத் தொகுதிக்கு வரும் பிப்.,5 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை 8 ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து, அங்கு போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டதால், மீண்டும் அக்கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப, காங்கிரஸ் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். வேட்பாளர் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் எனக்கூறியுள்ளார்.

பா.ஜ.,வும் இங்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நாளை( ஜன.,08) நடக்கும் அக்கட்சியின் மையக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, இத்தேர்தலிலும் களமிறங்க உள்ளது.

அதேநேரத்தில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இத்தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இறுதி முடிவை பழனிசாமி எடுப்பார் என அக்கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் நடந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடவில்லை. இக்கட்சி ஏற்கனவே, 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்யூ., ஆதரவு





இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாநிலச்செயலர் பெ.சண்முகம் அறிவித்து உள்ளார்.

Advertisement