பானை வாங்கலையா... பானை
திருப்பூர் : பொங்கல் தொகுப்புடன் அரசே முழு கரும்பை இலவசமாக வழங்குவதால், பொங்கல் விழாவையொட்டி, சில ஆண்டுகளாக கரும்பு விற்பனை சற்று மந்தம் தான்.
வீடு, நிறுவனங்களில் பொங்கல் வைத்து வழிபாடு செய்பவர்கள் கட்டாயம் ஒரு ஜோடி கரும்பு வாங்குவர் என்பதால், திருப்பூரில் கரும்பு விற்பனைவரும் வாரத்தில் துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல், நிலக்கோட்டை, ஈரோடு மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து கரும்புகளை வாங்கி இருப்பு வைத்து விற்க வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜோடி, 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட முதல் தர கரும்பு விலை, நடப்பாண்டு வரத்துக்கு ஏற்ப ஏற்ற, இறக்கம் காணப்படலாம்.
புது மண் பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இன்றும் கிராமங்களில் தொடர்வதால், மண் பானைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. கோவை, தேனி, போடி உள்ளிட்ட பகுதியில் இருந்து புதிய பானைரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
அரை கிலோ பச்சரிசி வேகும் பானை, 85 - 95 ரூபாய்; ஒரு கிலோ பச்சரிசி வேகும் பானை, 130 - 140 ரூபாய்; அதற்கு மேல் என்றால் 180 - 250 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன அனுப்பர்பாளையத்தில் உள்ள பாத்திர பட்டறைகளில் பத்து நாட்களுக்கு முன்பே பித்தளை, எவர்சில்வர், வெண்கல பொங்கல்பானை உற்பத்தி துவங்கி விட்டது.
பொங்கலுக்கு முதல் நாள் போகி என்பதால், வீடு, நிறுவனங்களில் காப்பு கட்டுவதற்கு தேவையானபூளைப்பூக்களை காடுகளிலும், தோட்டங்களிலும் பறித்து இருப்பு வைக்கும் பணியை இப்போது வியாபாரிகள் துவக்கியுள்ளனர். ஆவாரம் பூ தேடுதல் தொடர்கிறது.