வீட்டை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தும் நடிகர் சல்மான்கான்
மும்பை: தொடர் கொலை மிரட்டல்கள் காரணமாக பாலிவுட் நடிகர் சல்மான் வீட்டில் குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடு மும்பை பந்தராவில் கேலக்ஸி என்ற பகுதியில் உள்ளது. கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரசை சேர்ந்த பாபா சித்திக், 66, கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகன் ஜிஷானுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அதே ஆண்டு ஏப்ரலில் இரு மர்ம நபர்கள் இவரது வீடு முன்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இது தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.தொடர்ந்து பிஷ்னோய் கும்பல் ரூ. 5 கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் டிசம்பர் 5,2024 அன்று சல்மான் கானை மீண்டும் அச்சுறுத்தும் வகையில் சம்பவம் நடைபெற்றது. சல்மான் கானின் சினிமா படப்பிடிப்பை காண வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.
தொடர்ச்சியாக இவ்வாறு நடைபெறும் அச்சுறுத்தல் சம்பவங்களால் நடிகர் சல்மான் கான் தனது வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பால்கனி பகுதியில் குண்டு துளைக்காத கண்ணாடிகளைப் பொருத்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.