சன்னியாசிப்பேட்டையில் வாரச்சந்தை துவக்கம்
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் வாரச்சந்தை துவக்க விழா நடந்தது.
பண்ருட்டி அடுத்த பாலுார் சுற்று பகுதியில் அதிகளவு கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் காராமணிக்குப்பம் வாரச் சந்தையை தவிர வேறு சந்தைகள் இல்லை. இதனால் பொதுமக்கள் பண்ருட்டிக்கு சென்று வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன் பாலுார் அடுத்த சன்னியாசிப்பேட்டையில் வாரச் சந்தை நடந்துள்ளது. அதனடிப்படையில் பொதுமக்களின் தேவைக்காக நேற்று சன்னியாசிப்பேட்டையில் வாரச்சந்தை துவக்க விழா நடந்தது. வாரச் சந்தையை ஊராட்சி தலைவர் முத்துகுமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கவிதா,ஊராட்சி செயலர் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
துவக்க நாளான நேற்று 40 க்கும் மேற்பட்ட கடைகள் இடம் பெற்றிருந்தது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடத்தப்படும் என ஊராட்சி தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார்.
பொதுமக்கள் சந்தையில் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர்.