பழுது நீக்க கொடுத்த மொபைல் போனில் அந்தரங்க போட்டோக்கள் டவுன்லோடு கடை உரிமையாளரிடம் விசாரணை
புதுச்சேரி : பழுது நீக்க கொடுத்த மொபைல்போனில் இருந்த சுற்றுலா பயணியின் அந்தரங்க புகைபடங்களை டவுன்லோடு செய்து ரசித்த பழுதுநீக்கும் கடை உரிமையாளரை சைபர் கிரைம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானா ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 25 வயது பெண் சுற்றுலா பயணி. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தோழியுடன் புதுச்சேரி வந்தார்.
சுற்றுலா தளங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணி மொபைல்போன் கடந்த 2ம் தேதி பழுதானது. புதுச்சேரி ரெயின்போ நகர் மொபைல்போன் பழுது நீக்கும் கடையில் கொடுத்து பழுதுநீக்க கூறினார்.
பழுதுநீக்க மொபைல்போன் லாக் ஓப்பன் செய்யும் பின் நம்பரையும் மொபைல்போன் ரிப்பேர் கடை உரிமையாளர் பெற்று கொண்டார். மறுநாள் 3ம் தேதி பழுது சரிசெய்யப்பட்ட மொபைல்போனை சுற்றுலா பயணி வாங்கி பார்த்தபோது, கைரேகை லாக் ஓப்பன் மாற்றப்பட்டு இருந்தது.
வாட்ஸ்ஆப் திறந்து சில தகவல்கள் எடுக்கப்பட்டும், கேலரியில் இருந்த தனது அந்தரங்க புகைப்படம், வீடியோக்களும் வேறு ஒரு மொபைல்போனுக்குேஷர் செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மொபைல்போன் பழுதுநீக்கும் கடை உரிமையாளரிடம் கேட்டபோது, தான் எதும் செய்யவில்லை என கூறினார். இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் அப்பெண் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், சுற்றுலா பயணியின் மொபைல்போனில் இருந்த அந்தரங்க புகைப்படம், வீடியோக்களை மொபைல்பழுது பார்க்கும் கடை உரிமையாளர் தனது மொபைல்போனுக்கு ேஷர் செய்து ரசித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, மொபைல்போன் பழுதுநீக்கும் கடை உரிமையாளரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீஸ் கூறுகையில், 'மொபைல்போன்களை சர்வீஸ் கொடுக்கும்போது, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மொபைலில் உள்ள தனது தனிப்பட்ட புகைப்படங்களை டெலிட் செய்துவிட்டு, மெமரி கார்டு கழற்றி விட்டு கொடுக்க வேண்டும்' என்றார்.