ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு நெறிமுறைகள் வெளியீடு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனுவை அரசிற்கு அனுப்பி, அரசிதழில் பதிவு செய்து, அனுமதி பெற்ற பின், போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதால், ஜல்லிக்கட்டு நடத்தும் விழாக்குழுவினர் ஒரு மாத காலத்திற்கு முன் மாவட்ட கலெக்டரிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
அரசிதழில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு, வடமாடு நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய காப்பீடு செய்ய வேண்டும்.
மேலும், காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால், உரிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளதை விழா குழுவினர் உறுதிப்படுத்த வேண்டும். போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள், முன்னரே தெரிவித்து, முன் அனுமதி பெற வேண்டும்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு எவ்விதமான ஊக்கமருந்துகளோ, எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களையோ செலுத்தக்கூடாது.
காளைகளின் மீது ஜிகினா துாவுதல், கண்களில் எலுமிச்சை சாறு பிழிதல், எண்ணெய் தடவுதல் போன்று காளைகளை துன்புறுத்தக்கூடாது.
திறந்த வெளியில் போட்டியை நடத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி நிகழ்ச்சிகளை பதிவு செய்ய வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடித்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளன.