மளிகை தொகுப்பு விற்பனை கலெக்டர் துவக்கி வைப்பு

கடலுார், : கடலுார் பஸ் நிலையத்தில், கூட்டுறவு துறை சார்பில் பொங்கல் சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, கூட்டுறவுத் துறை சார்பில் தரமான மளிகை பொருட்கள் தொகுப்பு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இனிப்பு பொங்கல் தொகுப்பு ரூ.199க்கு விற்கப்படுகிறது. அதில், தலா அரை கிலோ பச்சரிசி, பாகு வெல்லம், 100 கிராம் பாசிப்பருப்பு, 50 கிராம் முந்திரிதிராட்சை, 50 கிராம் ஆவின் நெய், 5 கிராம் ஏலக்காய் இருக்கும். சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499க்கு விற்கப்படுகிறது. அதில், அரை லிட்டர் செக்கு கடலை எண்ணெய், மளிகைப் பொருட்கள் உட்பட 20 பொருட்கள் இருக்கும். ரூ.999க்கு விற்கப்படும் பெரும் பொங்கல் தொகுப்பில் 35 பொருட்கள் இருக்கும். கூட்டுறவுத் துறை மூலம் குறைவான விலையில் விற்கப்படும் தரமான பொருட்களை மக்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்றார்.

அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், துணைப் பதிவாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement