சர்வதேச யோகா போட்டி
புதுச்சேரி, : புதுச்சேரியில் நடக்கும் யோகா போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,208 பேர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், 30வது சர்வதேச யோகா திருவிழா, பழைய துறைமுக வளாகத்தில் கடந்த, 4ம் தேதி துவங்கியது. விழாவை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
இதில், புதுச்சேரி - 469; ஆந்திரா - 30; டில்லி - 22; குஜராத் - 15; அரியானா - 15; கர்நாடகா - 200; கேரளா - 2; மகாராஷ்டிரா - 12; தமிழ்நாடு - 421; தெலுங்கானா - 9; உத்தரபிரதேசம் - 1; மற்றும் மேற்கு வங்கம் -12, என மொத்தம் 1,208 பேர், இருபாலர் பிரிவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இதில், 9 முதல் 14 வயது; 15 முதல் 18 வயது ; 19 முதல் 27 வயது; 28 முதல் 35 வயது; 36 முதல் 45 வயது; மற்றும் 46 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மொத்தம், 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று காலை பொதுமக்களுக்கு யோகா பயிற்சி நடந்தது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு போட்டியாளர்கள், தங்கள் யோகா திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் பயிலரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று யோகா நித்ரா பயிற்சி, போட்டிகள், பயிலரங்கங்கள், கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. நான்கு நாட்கள் நடக்கும் விழா, நாளை குழந்தைகளுக்கான யோகா, இறுதிப்போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெறுகிறது.