பொங்கல் பண்டிகை விற்பனை களைகட்டும்
திருப்பூர், : தீபாவளி பண்டிகைக்கு பிறகு சிறிது ஓய்வெடுத்த திருப்பூர் நகரம், பொங்கல் பண்டிகைகால விற்பனையில் மீண்டும் கலகலப்பாக மாறப்போகிறது.
ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பொங்கல் பண்டிகை கால அதிரடி தள்ளுபடியுடன் விற்பனையை துவங்க இருக்கின்றன.
கடந்த வாரம் வரை, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விற்பனை நடந்தது; இன்று முதல், பெரும்பாலான கடைகளில், தைப்பொங்கல் பண்டிகை விற்பனை அதிரடியாக துவங்கப்போகிறது.
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை இரண்டும், ஹிந்துக்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகை. புதுமண தம்பதிகளுக்கும், இது முக்கியமான பண்டிகையாக இருக்கிறது.
ஜவுளிக்கடைகளில், வேட்டி விற்பனை சிறப்பு தள்ளுபடியுடன் துவங்கியிருக்கிறது. வேட்டி மற்றும் சட்டை 'காம்போ' ஆபர் அதிரடியாக துவங்கியிருக்கிறது.
காதர்பேட்டை, குமரன் ரோடு, மாநகராட்சி அலுவலக ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி ரோடு பகுதி கடைகளிலும், விற்பனை சூடுபிடிக்க துவங்கிவிட்டது.
பொங்கல் பண்டிகைக்கான கரும்பு, மஞ்சள்செடி, பூ விற்பனை 11 மற்றும் 12ம் தேதி முதல் துவங்கும். பலகாரக்கடைகளில், அரிசி முறுக்கு விற்பனையும் துவங்க இருக்கிறது.
வியாபாரிகள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகை விற்பனை துவங்கிய பிறகுதான், மீண்டும் திருப்பூர் பழைய நிலையை அடையும். தீபாவளி விற்பனை முடிந்து, புதிய ஆடை உற்பத்தி செய்து, பொங்கல் பண்டிகை விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, குழந்தைகள் ஆடைகள் அதிகம் வருகிறது.
ஜவுளிக்கடை, பர்னிச்சர் கடைகள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில், சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை துவங்கிவிட்டது,' என்றனர்.