தமிழ் வாழ்க என கோலமிடுங்கள் அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்

1

விழுப்புரம் : பொங்கல் திருநாளையொட்டி, பொது மக்கள் தங்கள் வீடுகளில் 'தமிழ் வாழ்க' என கோலமிடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், தினமலர் நாளிதழ் மற்றும் சூப்பர் ருசி பால் இணைந்து, நேற்று நடத்திய கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அமைச்சர் பொன்முடி பரிசு வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை, மகளிருக்கு இலவச பஸ் பயணம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை என்று, மகளிர் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அவரது எண்ணங்களுக்கு ஏற்ப, தமிழக அரசுக்கு ஆதரவாக தினமலர் நாளிதழும், மகளிருக்காக கோலப்போட்டி நடத்துவது பெருமையாக உள்ளது. தினமலர் கோலப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

தமிழ் வாழ்க என்று, வீடுகளில் கோலமிட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதே போல், வரும் பொங்கல் பண்டிகையின்போது தமிழ் வாழ்க என்று வீடுகளில் கோலத்தை வரைந்து, தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இந்த கோலப்போட்டியில் கலந்துகொண்டு, பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்தும், பாராட்டுக்களும், தினமலர் நாளிதழுடன் இணைந்து வழங்கிய நிறுவனங்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு பொன்முடி பேசினார்.

Advertisement